சென்னை,

பிரபல ஓட்டலில் நண்பர்களுடன் சேர்ந்து பிரேக் டான்ஸ் ஆட அனுமதி மறுத்ததால், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் குண்டுவெடிக்கும் என்று கடிதம் எழுதி வைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஸ்டார் ஓட்டலில் இரவு பிரேக் டான்ஸ் நடைபெற்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று இந்த ஓட்டலின் ரிஷப்சனில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், முதல்வர் எடப்பாடி கலந்துகொள்ளும் 4வது மாடி நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஓட்டல் மேலாளர் அரிந்தம் குணார் உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஓட்டல் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், எந்தவித தடயமும் சிக்கவில்லை. இதன் காரணமாக வெடிகுண்டுகடிதம் புரளி என தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கடிதம் எழுதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடிதம் ஓட்டல் ரிஷப்சனில் கிடைத்ததால், யாரோ மர்ம நபர் வந்துதான் கடிதத்தை வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகமடைந்தனர்.

அதையடுத்து ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தீவிரமாக ஆராய்ந்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் ஓட்டல் வரவேற்பு அறையில் உள்ள மேஜையில் ஒரு கடிதத்தை வீசி விட்டு செல்வது தெளிவாக பதிவாகி இருந்து.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், இந்த கடிதத்தை எழுதியது தனியார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான, திருவான்மியூரை சேர்ந்த அருண்குமார் என தெரிய வந்தது.

அவர், கடந்த 2ம் தேதி இரவு ஓட்டலுக்கு மது அருந்த தனது மனைவி  2 ஆண் நண்பர்களுடன் வந்துள்ளார். மது அருந்துவிட்டு, டான்ஸ் ஆட முடிவு செய்து, டான்ஸ் நடைபெற்று வரும் அறைக்குள் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், டான்ஸ்ஆட விதிப்படி மனைவியுடன்  மட்டும்தான் செல்ல முடியும் என்று கூறி, அவர நண்பர்களை அனுமதிக்க ஓட்டல் நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார்  ஓட்டல் வரவேற்பு அறையில், முதல்வர் எடப்பாடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

தற்போது அருண்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.