மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்ய பஞ்சோலி மற்றும் நடிகை ஜரினா வகாப் ஆகியோரின் மகன் சூரஜ் பஞ்சோலி மீது நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சூரஜ் பஞ்சோலி

பாலிவுட்டின் பிரபல நடிகர் சூரஜ் பஞ்சோலியின் பெற்றோர் ஆதித்ய பஞ்சோலி மற்றும் ஜரீனா வகாப் ஆகியோரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவார்கள்.    சூரஜ் பஞ்சோலி இந்தி நடிகை ஜியா கான் உடன் நட்பாக இருந்து வந்தார்.  இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.  அமிதாப் நடித்த நிசப்த் என்னும் இந்திப்படத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றவர் ஜியாகான்.

ஜியா கான்

கடந்த 2013ஆம் வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதி அன்று நடிகை ஜியாகான் தனது தாயார் ரூபியாகான் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.    தற்கொலை செய்துக் கொண்ட அன்று காலையில் சூரஜ் பஞ்சோலியுடன் அவர் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.    இது குறித்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆதித்ய பஞ்சோலி – ஜரினா வகாப்

ரூபியா கான் தனது மகள் ஜியா,  சூரஜ் பஞ்சோலியால் கொல்லப்பட்டதாக கூறி சிபிஐ விசாரணை கோரினார்.   அதை அடுத்து 2013ஆம் வருடம் அக்டோபர் மாதம் சிபிஐ க்கு வழக்கு மாற்றப்பட்டது.    வழக்கை விசாரித்த சிபிஐ தற்போது தங்கள் அறிக்கையை மும்பை போலிசுக்கு அளித்துள்ளது.

அதில், “ஜியா கான் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.  அதில் தான் சூரஜ் பஞ்சோலியுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும்,  ஆனால் அவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கியதால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   விசாரணையில் அது உண்மை என அறியப்பட்டுள்ளது.   நடிகர் சூரஜ் மேல் நடவடிக்கை எடுக்கலாம்” என கூறி இருந்தது.

அதை ஒட்டி மும்பை போலீசார் சூரஜ் பஞ்சோலி மீது ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.