டில்லி,
போபர்ஸ் வழக்கு முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மத்திய பாரதியஜனதா அரசை திருப்தி படுத்த எண்ணிய சிபிஐ, பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் துணை குழுவிடம் கடந்த ஆண்டு தெரிவித்தது.
சிபிஐ-ன் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசின் அட்டர்ஜி ஜெனரல் வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, 1986-ம் ஆண்டு ஸ்வீடனில் இருந்து போபர்ஸ் பீரங்கிகளை ரூ1,437 கோடிக்கு கொள்முதல் செய்ததில் மிகப் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேட்டில், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் குடும்பத்துக்கு மிக நெருக்கமான குவாத்ரோச்சிதான் இடைத்தரகராக செயல்பட்டார் என்றும், போபர்ஸ் பீரங்கிகளை கொள்முதல் செய்ய அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
இது நாட்டில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதுகுறித்த வழக்கில்,இந்துஜா சகோதரர்களுக்கு பங்கு இல்லை என்று கடந்த 2005ம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது சிபிஐ தவறான தகவலகள் மூலம் வழக்கை நடத்தி மக்களின் வரிப்பணம் 250 கோடி ரூபாயை வீணடித்துவிட்டது என்று சிபிஐக்கு கண்டனமும் தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்று இந்த வழக்கில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குற்றவாளி இல்லை என கடந்த 2014-ல் டில்லி உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.கபூர் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தார்.
இந்நிலையில், பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், தற்போது வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரணை செய்ய விரும்புவதாகவும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக வும் கூறி சிபிஐ மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மத்தியஅரசு அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்டுள்ளது. இதற்கு அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
வழக்கு முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது, தள்ளுபடியாகி விடும் என்றும், மேலும், ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மீண்டும் வழக்கு தொடர்ந்தால் அது அரசு மீது அதிருப்தியை உருவாக்கும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
தேவையானால் ஏற்கனவே நடைபெற்று வரும் வழக்கோடு, இதையும் ஒரு வழக்காக இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஆனால் அந்த வழக்கும் விசாரணையின்போது நிற்குமா என்பது சந்தேகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உளளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கணக்கில்கொண்டு, தற்போது வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவு பெருகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிமீது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ இப்போது மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, சிபிஐ பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று கூறி உள்ளது.