பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கரை ஒதுங்குவது குறித்து அந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால், இதுகுறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளனர் அந்த பகுதி மக்கள்.

கழுகுகளும் நாய்களும் இந்த சடலங்களை உண்பதற்காக பெருமளவில் வந்து குவிவதால், குடிநீருக்காக இந்த புண்ணிய நதியின் நீரை பயன்படுத்தும் அந்த பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு முன்னர் சடலங்களை எரிக்க ஆறாயிரம் ரூபாய் வரை செலவான நிலையில் தற்போது விறகு முதல் சம்பிரதாய பொருட்கள் என்று அனைத்து விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டதால் 15 ஆயிரம் வரை செலவாகிறது, இதனால் இடைத்தரகர்கள் தான் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர், பணத்திற்கு வழி இல்லாதவர்கள் சடலங்களை அப்படியே நதியில் விட்டு செல்கின்றனர்.

புனித நதியாம் கங்கை நதியை தூய்மைப் படுத்த ‘நவாமி கங்கே’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்த நதிக்கரையில் மின்மயானங்களை அமைத்திருந்தால் சாமானியர்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும் என்று அந்தப்பகுதியில் உள்ள சமூக நல ஆர்வலர் அஸ்வினி குமார் வர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சடலங்களை இதுபோல் நதியில் விட்டு செல்வதால் இந்த பகுதி மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

இதுகுறித்து பக்ஸர் மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பான புகார் என்னிடம் வந்திருக்கிறது, நதிக்கரையை சுத்தப்படுத்தவும் தேவையான நடவடிக்கையை எடுக்கவும் அந்தப்பகுதி தூய்மை பணி அலுவலரிடம் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.