மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச்சடங்குக்ககாக எடுத்துச்செல்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதையொட்டி, ஒரே ஆம்புலன்சில் சுமார் 22 சடலங்களை, நெரித்து, திணித்து மயானத்து எடுத்துச் செல்லப்பட்டது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 48,700 பேருக்குப் பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பு 43,43,727 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 524 பேர் உயிழந்துள்ளதுடன், இதுவரை மொத்தம் 65,284 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 6லட்சத்துக்கு 74 ஆயிரத்து 770 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பீட் நகரில் உள்ள மருத்துவமனையில், இறந்த 22 கொரோனா நோயாளிகளின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் ஏற்றி எடுத்துச்செல்லப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீட் நகரில் உள்ள அம்பாஜோகோய் எனும் இடத்தில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து ஒரே நேரத்தில் 22 உடல்களை ஒரு ஆம்புலன்சுக்குள் அடுக்கி, திணித்து, நுழைத்து எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த பீட் நகராட்சித் தலைவர் ராஜ்கிஷோர், “இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாகவும், மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதலாக ஆம்புலன்ஸ் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவோம்” என தெரிவித்துள்ளார்.