டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் மிதக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி, புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டமான விஸ்டாவை மட்டுமே பார்க்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது  அலை தீவிரமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது. இதனால், பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.  மேலும், மருந்து, மருத்துவ வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் விவகாரத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட  பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேரும் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளது.  உயிரிழப்பு அதிகரித்து வருவதால், பிணங்களை எரிக்கவும் பல மணி நேரம் காத்திரும் அவலங்களும் ஏற்பட்டன. இதனால், பலர் உயிரிழந்தவர்களின் உடல்களை நதியில் வீசி விடுவதாக கூறப்படுகிறது.  இறந்தவர்களின் பல சடலங்கள் கங்கையில் மிதந்ததாகவும், அவை பீகாரில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டு பீகார் வந்தடைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். ஏற்கனவே கடந்த 9ந்தேதி  ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,  இரண்டு மாறுபட்ட படங்களை வைத்து விமர்சித்து இருந்தார். அதில்,  மக்கள் நீண்ட வரிசையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் நின்று, மத்திய விஸ்டாவிற்கான கட்டுமானப் பணிகளின் காரணமாக தோண்டப்பட்ட இந்தியா கேட் – மற்றும் “மக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை பிரதமரின் அல்ல குடியிருப்பு ” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது, “ஆறுகளில் பாயும் எண்ணற்ற இறந்த உடல்கள்; மைல்கள் வரை மருத்துவமனைகளில் கோடுகள்; உயிர் பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்படுகிறது! பிரதமர், சென்ட்ரல் விஸ்டாவைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாத நிலையில்,உள்ளார், மோடி, அந்த இளஞ்சிவப்பு கண்ணாடிகளை கழற்றுங்கள்” என்று ரகுல்காந்தி இந்தியில் டிவிட் பதிவிட்டுள்ளார்.