எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன்.

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூட்யூபில் தமிழ் டாக்கிஸ் எனும் சேனல் வைத்து திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வந்தார்.

ஆண்டி இந்தியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆண்டி இந்தியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் தினத்தன்று, ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக இயங்கிவரும் யூடியுப் தளத்திலேயெ வெளியிட உள்ளதாக அவரே அறிவித்திருக்கிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் மத நல்லிணக்கத்தையும், அரசியல் நய்யாண்டியையும் கொண்டிருக்கும் படம் எனக் காட்டுகின்றன. மேலும் போஸ்டரில் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என அனைத்து குறியீடுகளும் இருப்பதால் படம் கண்டிப்பாக இந்திய அரசியலைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக இந்த போஸ்டரில் ப்ளூ சட்டை மாறன் அவருக்கு அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

திரையரங்கில் வெளியிடக் கூடாது என்று ஒருசில திரையரங்கு உரிமையாளர்களே இறங்கி வேலை செய்கிறார்கள். படம் திரையரங்கா இல்லை ஓடிடியா என சந்தேகம் நிலவிய போது, கண்டிப்பா திரையரங்குதான் என்றார் ப்ளூ சட்டை மாறன். இப்போது டிசம்பரில் படம் திரையரங்கில் வெளியாகும் என்று திரையரங்கு வெளியீட்டை மறுபடி உறுதி செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இரண்டு நிமிட திரைப்பட விமர்சனங்களை விரும்புகிறவர்களுக்கு; இந்த இரண்டு மணி நேர விமர்சனம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.