சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்த சென்னை மாநகராட்சி மற்றும் திமுக அரசுக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்தது. இங்கு பணியாற்றிய சுமார் 1,900 தூய்மைப் பணியாளர்களும் மத்திய அரசின் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சம்பளம் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 1 முதல் 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வந்தனர். “பத்து ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக சம்பள உயர்வு பெற்று 23 ஆயிரம் பெற்று வருகிறோம். தனியாரிடம் சென்றால் 16,950 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக தருகின்றனர். இதனை ஏற்கப் போவதில்லை” எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பிபிசி தமிழிடம் பேசியிருந்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தூய்மை பணியாளர்கள் போராட்டம் அதிரடியாக நள்ளிரவு காவல்துறையினரால் கலைக்கப்பட்டது. அப்போது, தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கையாண்ட விதம் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ‘போராட்டக் களத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் உள்பட 13 பேரைக் காணவில்லை’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையின்போது, வழக்கறிஞர் கு.பாரதி உள்பட ஆறு பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் மற்றவர்களை விசாரித்துவிட்டு அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் ஆறு பேர் மீதும் ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரும் மறுவிசாரணை வரும் வரையில் ஊடக நேர்காணல்களை அளிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தூய்மை பணியாளர்களின் கோரிக்கை ஏற்று நீதிமன்றம் அவர்களின் சம்பளத்தை வழங்கி பணியில் சேர்க்க ஆணையிட்டது. ஆனால், தனியார் நிறுவனம் அந்த சம்பளத்தை வழங்க முன்வரவில்லை. இதுவரை அவர்களுக்கு பணி கிடைக்காத நிலை உள்ளது.
இந்த நிலையில், தீபாவளியையொட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, ‘கருப்பு தீபாவளி’ என வேலையிழந்த தூய்மை பணியாளர்கள், வாழ்த்து போஸ்டர் ஒட்டினர். இந்த போஸ்டர், சென்னை மாநகராட்சி ஏரியா உள்பட பல பகுதிகளில் ஒட்டப்பட்டது. ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில், ஆங்காங்கே துாய்மை பணியாளர்கள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை காவல்துறையினர், அந்த போஸ்டர்களை விரைந்து வந்து கிழித்ததுடன், அதை ஒட்டிய துாய்மை பணியாளர்கள் யார் என விசாரித்து, அவர்களை தேடி தேடி கைது செய்தனர். சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூய்மை பணியாளர்களின் போஸ்டரில், ‘சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அவர்களே… சட்டத்திற்கு விரோதமாக 2,000 துாய்மைப் பணியாளர்களை, ‘ராம்கி’ ஒப்பந்ததாரரிடம் வீசி எறிந்து, எமது வாழ்க்கையை இருளில் தள்ளிய உங்களுக்கு, எங்களது கருப்பு தீபாவளி வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.