இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிரான போக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வளைகுடா நாடுகளில் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘ஞானவாபி’ மசூதி சர்ச்சை குறித்து ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து பேசிய அவதூறான கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நுபுர் சர்மா

நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பா.ஜ.க. உறுப்பினர் நவீன் குமார் ஜிண்டால் உள்ளிட்ட பலர் நுபுர் சர்மா-வின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்கள் மீது பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், நுபுர் சர்மா-வின் இந்த அவதூறு கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய தொழிலாளர்கள் அதிலும் சமீபகாலமாக வடஇந்தியர்கள் அதிகளவு வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களுக்கு விசா நீட்டிப்பு மற்றும் மறு விசா வழங்க தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் இந்திய தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இந்திய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் அதிகரித்து வருகிறது.

தவிர, குவைத் நாட்டில் உள்ள குப்பை சேகரிக்கும் தொட்டிகளில் மோடி படத்தை ஒட்டி அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இந்திய எதிர்ப்பு கோஷம் அந்நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பா.ஜ.க. சார்பில் அதன் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இங்கு அனைத்து மதத்தினரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர்” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நுபுர் சர்மா-வின் பேச்சு குறித்தோ அதற்கு பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்தோ அவர் மீதான வழக்கு குறித்தோ எந்தவொரு விளக்கமும் இதுவரை பா.ஜ.க. தரப்பில் இருந்து வெளியாகாத நிலையில் அருண் சிங்-கின் இந்த அறிக்கை வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.