மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடி, அமித்ஷாவின் அதிரடி அரசியல் நடவடிக்கை மற்றும் மக்கள் விரோத நடவடிக்களால், அவர்களது மூக்குகள்  உடைக்கப்பட்டு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோல, பாஜக மூத்த தலைவர்களும், பாஜகவுக்கு மக்களிடையே இருந்து வரும் செல்வாக்கு, மோடி, அமித்ஷா போன்றவர்களின் அதிகார மீறல் நடவடிக்கைகளால், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும், மக்கள் அனுதாபத்தை இழந்து விட்டதாக புலம்பி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சிவசேனாவுடன் இணைந்து வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், சிவசேனா கேட்டிருந்தது அதிகாரப்பகிர்வில் 50க்கு 50 என்ற பார்முலாவை பாஜக ஒத்துக்கொள்ள மறுத்ததால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, உறவு முறிந்தது.

இதையடுத்து கடந்த ஒரு மாதமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்து வந்த நிலையில், திடீரென கடந்த 23ந்தேதி பாஜக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்த அதிரடி திருப்பம், மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை 5.30 மணிக்கு நீக்கப்பட்ட தும், காலை 8 மணிக்கே பதவி ஏற்பு விழா நடைபெற்றும்  கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இதற்கிடையில், பாஜக ஆட்சிக்கு எதிராக  சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதி மன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பும், அதைத்தொடர்ந்து பட்னாவிஸ், அஜித் பவார் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிகழ்வுகளும் நாட்டு மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கொண்ட முயற்சியால், பாஜகவின் ஒன்மேன் ஆர்மியாக செயல்பட்டு வருத் பிரதமர் மோடி, அவரது நண்பர் அமித்ஷாவின் மூக்குகள் உடைக்கப்பட்டு விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே கோவா, கர்நாடகா, அரியானா போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சிகளை உடைத்து, ஆட்சியை பாஜக அமைத்த நிகழ்வுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதுபோல, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக எடுத்த முயற்சியால், அங்கிருந்து பாஜக நாக்அவுட் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சிக்கு, பாஜக ஆட்சியாளர்கள் குடைச்சல் கொடுத்து வரும் நிகழ்வு பொதுமக்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பாஜகவுக்கு ஆம்ஆத்மி கட்சிகள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  அங்கு விரைவில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு கடந்த சனிக்கிழமை பாஜக பதவி ஏற்க அவசரம் அவசரமாக, பெரும்பாலான மக்கள்  தூங்கிக் கொண்டிருக்கும் அதிகாலையிலேயே, ​​ராஷ்டிரபதி பவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், காலை  8.10 மணிக்கு பதவி ஏற்பு விழா  நிறைவடைந்தது. காலை 8.16 மணிக்கு ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் ஆகியோருக்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா  வாழ்த்து கூறி டிவிட் போட்டது, மேலும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்த நிலையில்தான், நேற்று பிற்பகல் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்தபோது, ​​பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு ஆட்சி அமைக்க ரகசியமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில்,  “உச்சநீதிமன்றத்தின்  நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதியை நிர்ணயித்த உத்தவைத் தொடர்ந்து, அஜித்பவார், பாஜகவுடன் கூட்டணியை தொடர முடியாது என்று கூறி, தனது ராஜினாமா அறிவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த பட்னாவிஸ்-சும் எங்களிடம் போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று கூறி தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிராவில் இவ்வாறு பல்வேறு அரசியல் களேபரங்கள் நடைபெற்று வந்த நேரத்தில், குடியரசுத் தலைவர், துணைகுடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி உரையாற்றிக்கொண்டிருந்தனர்.

“நவம்பர் 25, 1949 அன்று அரசியலமைப்பு சபையில் தனது கடைசி உரையை நிகழ்த்தியபோது, ​​டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பின் வெற்றி இந்திய மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நடத்தைகளைப் பொறுத்தது என்று கூறியிருந்தார்” என்றும்,  அரசியலமைப்பு அறநெறியின் “முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்போது,” அரசியலமைப்பு ஒழுக்கத்தின் “சாராம்சம் அரசியலமைப்பை எந்தவொரு கருத்தியல் வேறுபாடுகளுக்கும் மேலானதாக கருதுவதாகும்” என்றும் குடிரிசுத் தலைவர் கோவிந்த்  கூறினார்.

ஆனால், மகாராஷ்டிராவில் அரசியல் சட்டமே படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறி,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வெளிடநடப்பு செய்து, அங்கிருந்த அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில்தான், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வெளியானது. இதன் தாக்கம்  பாஜக தலைமைக்கும், மோடி,அமித்ஷாவின் நடவடிக்கைகளுக்கும்  விழுந்த சம்மட்டி அடியாக கருதப்பட்டது.

தீர்ப்பு வெளியான சிறிது நேரம் கழித்து, மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பட்னாவிசுடம் பேசியதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக காத்திருக்காமல் வெளியேறுமாறு மோடியும் ஷாவும் ஃபட்னவிஸுக்கு அறிவுறுத்தியதாகவும், கர்நாடகாவிலும் இதேபோன்ற சூழ்நிலையில் அப்போதைய முதல்வர் பி.எஸ். யெடியூரப்பா சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் உரை நிகழ்த்தினார், பின்னர் ராஜினாமா செய்தார். அதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க ஃபட்னாவிஸிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படியே  பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே ஒரு செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ – ஃபட்னாவிஸ் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்ற செய்தியை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்துதான் பாஜக முதல்வர் பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் இந்த நடவடிக்கைகளால், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பேரிழப்பு ஏற்பட்டு விட்டதாகவும், இந்த  பின்னடைவு ஏற்பட, மோடி, அமித்ஷா மட்டுமே காரணம் என்று சில பாஜக மாநில  மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து கூறிய அமித்ஷா, அஜித் பவருடன் கூட்டணி வைத்து அரசாங்கத்தை அமைப்பதற்கான முடிவு மாநில அளவில் எடுக்கப்பட்டது என்று கூறி, ஃபட்னாவிஸ் தனது மீது பழியை சுமத்த முயன்றார், ஆனால் அதை யாரும் நம்பவில்லை.

அரசியல் சாணக்கியராக கருதப்பட்ட அமித்ஷா மகாராஷ்டிராவில் சறுக்கிய நிகழ்வு கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தி உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்னர். ஆனால், பல மூத்த பாஜக  தலைவர்கள் தங்களின் உள்ளக்குமுறலை புலம்பி வருகின்றனர்.

இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக, பாஜக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமான மாநிலத்தை இழந்துள்ளதாகவும், இது  மோடி மற்றும் ஷா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு  என்றும், இது  அடுத்த சில நாட்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறி உள்ளனர்.

மகாராஷ்டிராவில்  நடைபெற்ற  அரசியல் களேபரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜகமீது மக்கள் கொண்ட நன்மதிப்பு உடைந்துபோய் விட்டதாகவும் மாநில பாஜக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.