திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழக்கப்படும் என்ற கேரள முதல்வரின் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கொரோனா தடுப்பூசி இலவசம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பாரதியஜனதா கட்சி, கேரளாவில், தேர்தல் நடத்தை விதி மீறல் என புகார் கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகள் 2021 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலின்போது, பாரதியஜனதா கட்சி முதன்முதலாக தனது தேர்தல் அறிக்கையில், பீகார் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தின. அதைத்தொடர்ந்து, தங்களது மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தமிழகம் உள்பட பல மாநிலங்கள் அறிவித்து உள்ளன.
அதுபோல கேரளாவில், கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தப்பின், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இதற்காகக மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வசூலிக்காது. இதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் என்பது தெரியவில்லை என செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இதற்கு அம்மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளாவில் இன்று உள்ளாட்சித் தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், முதல்வரின் அறிவிப்பு, தேர்தல் விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பீகார் தேர்தலின்போது கொரோனா தடுப்பூசி குறித்த பாஜகவின் அறிவிப்பு, தேர்தல் விதி மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்படி இருக்கும்போது, கேரள முதல்வரின் அறிவிப்பு எப்படி தேர்தல் விதிகளை மீறியது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன், முதல்வரின் கொரோனா தடுப்பூசி அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளை தெளிவாக மீறுவதாகும். இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.