சென்னை: தமிழ்நாட்டில் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு சட்டம்- ஒழுங்கு கெடுவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்வதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
திமுக அரசுமீது சமீப காலமாக பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறப்போர் இயக்கம் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ரூ.400 கோடி ஊழல் புகார் தெரிவித்துள்ளது. அதுபோல மின்சார துறையில் ரூ.400 கோடி ஊழல் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், கூட்டுறவு துறையில் ரூ.136 கோடி ஊழல் என அமைச்சர் பெரிய கருப்பன் மீதும், சாலைகள் போடப்பட்டதில் ரூ.750 கோடி ஊழல் என அமைச்சர் எ.வ.வேலு மீதும், ரேசன் பொருள் டெண்டரில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மீது, ரூ.992 கோடி ஊழல், ரூ.39கோடி பருப்பு ஊழல் என அமைச்சர் சக்கரபாணி மீதும் என பல புகார்கள் கூறியுள்ள நிலையில், சமீபத்தில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்திய ரெய்டு மூலம் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊழல்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பாஜக, திமுக ஆட்சிக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலின்தான் முதல் குற்றவாளி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட முதல்வரின் மனித நேய விழா விழாவில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர் என்று கூறியதுடன், தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது. என கூறியவர், கோவில்களில் பக்தர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வரும் செய்திக்கு முறையான பதில் அளிக்காமல், சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியதுடன், தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தமிழ்நாடு காவல்துறை, ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்ற சேகர்பாபு, எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய (பாஜக) குற்றச்சாட்டு, பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது என தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு காவல்துறைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பாக உள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது துறை தவறுகளுக்கு பதில் அளிக்காமல், எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதும், சட்டம் ஒழுங்கு குறித்து பேசியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.