சென்னை:
நடிகர் சூர்யாவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக இளைஞரணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அகரம் பவுண்டேஷன் சார்பில் வசதி வாய்ப்பற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார். அத்துடன், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனால் சூர்யாவுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தி.நகரிலுள்ள கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தலைமையில் நடைபெறும், இந்த செயற்குழுக் கூட்டத்தில் நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி.செல்வம், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சைப்படுத்திய எம்.எல்.ஏ. ஈஸ்வரன், அதைக் கண்டிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்பு & இறையாண்மையை கொச்சைப்படுத்தி, பொய்யைப் பரப்பும் வகையிலும் பேசிவரும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.