சென்னை: குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட பாஜக ஜெயிக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற  உள்ளது. இந் நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து ஐஸ் அவுஸ் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இப்போது நான் உதயநிதிக்காக ஓட்டுக்கேட்டு வந்தது, ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட்டபோது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்தது நினைவுக்கு வருகிறது. எனது மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிட்டார்கள். பின்பு வெறும் கையோடு திரும்பி சென்றனர்.

அப்போது உங்களுக்கு இன்னும் அதிகமாக 25 சீட் கிடைக்கப்போகிறது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு செய்தார்கள். திமுகவை அச்சுறுத்த முடியாது. அதிமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி தருகிறார்கள்.

பாஜக மோடியின் மஸ்தான் வேலை திமுகவிடம் செல்லாது. அனைத்து பத்திரிகைகளிலும், திமுக மீது குற்றச்சாட்டு கூறி விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில் கூறியவைகள் உண்மை என்றால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அது தொடர்பாக வழக்கு போட்டிருக்கலாம், தண்டனை பெற்று தந்திருக்கலாம். ஆனால் வழக்கு போடவும் இல்லை, நிரூபிக்கப்படவும் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.