கொல்கத்தா

வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் தோற்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றி உள்ளார்.

வரும் 19 ஆம் தேதி கொல்கத்தா நகரில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அவ்வகையில் நேற்று திருணாமுல் காங்கிரஸ் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டார்.

மம்தா தனது உரையில்,

”மேற்கு வங்கத்துக்கு நான் 3-வது முறையாக முதல்வராகி இருக்கிறேன்.  இம்முறை என்னுடைய நோக்கம் மாநிலத்தில் தொழிற்சாலைகள்,தொழில்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது ஆகும்.  இதுவே எனது பிரதான நோக்கம் ஆகும்.

பாஜக சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாநிலம் முழுவதும் தீவிரமான பிரச்சாரம் செய்ததைப் பார்த்தோம்.  அப்போது அவர்களைப் பார்த்து ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். ஆயினும் இம்மாநிலத்தின் மக்கள் பாஜகவினரைத் தோற்கடித்துள்ளார்கள்.

அப்போது  சமூக நல்லிணக்கத்துக்கான இடம் பெற்ற மேற்குவங்கம்  சிந்தித்ததை தான் நாளை இந்தியா சிந்திக்கும். வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் பாஜகவைத் தோற்கடிப்போம். இங்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட இதே நிலை, நாடு முழுவதும் ஏற்படும். நான் நாடுமுழுவதும் பாஜக தோற்பதைக் காண விரும்புகிறேன்”

எனத் தெரிவித்துள்ளார்.