சென்னை:
பாஜக மாநில தலைவர் எல் முருகன் தங்களுடைய கட்சி ஆகம சாஸ்திரத்தை ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார், மேலும் சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவற்றிற்கு தகுதியற்றவர்கள் கோயில்களின் கருவறைக்குள் நுழைய கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
பிராமணரல்லாதவர்கள் கோவில்களில் பூசாரி ஆவதற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதா? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எல் முருகன் தெரிவித்துள்ளதாவது: நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) ஒரு பேராசிரியரின் வேலையை செய்ய முடியுமா? முடியாதல்லவா?, ஆனாலும் கோவில் பூசாரிகளை நியமிப்பதில் யாரும் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆகம விதிகளின்படி செய்யப்படும் சடங்குகள் மற்றும் மத நடைமுறைகளை எங்கள் கட்சி எப்போதும் ஆதரிக்கும் என்று முருகன் தெரிவித்தார், மேலும் ஹிந்து மத தமிழ் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை எந்த தீங்குகளிலிருந்தும் பாதுகாக்க கட்சி எப்போதும் பாதுகாப்பாக நிற்கும் எனவும் எல் முருகன் தெரிவித்துள்ளார்.