டில்லி
பாஜக அரசு இந்து ராஜ்ஜியத்தை அமல்படுத்த விரும்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டத்தை ஒட்டி சமீபத்தில் இடது சாரிகள் அமைப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
ப சிதம்பரம் தனது உரையில், “குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் மிகவும் கடுமையாக நடந்து வருகிறது. சென்னை ஐஐடியில் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெண்டல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த போராட்டத்துக்கு ஜெர்மன் நாட்டு ஆதரவை அம்மாணவர் பெற்றுத் தந்துள்ளதற்காக நாம் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் அவரை நாட்டை விட்டு அரசு வெளியேறச் சொன்னதற்கு ஐஐடி இயக்குநர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.? அவர் எங்கு சென்றுள்ளார்? பணி ஓய்வு பெற்றுள்ளாரா? விடுமுறையில் சென்றுள்ளாரா? இல்லை இறந்து விட்டாரா?
பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததால் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்து ராஜ்ஜியத்தை அமைக்க விரும்புகின்றனர். இவ்வாறு இந்து ராஜ்ஜியம் அமைக்கப்பட்டால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தலித்துகளும் துன்புறுத்தப்படுவார்கள்.
தற்போது நடந்து வரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்தும் போராட்டமாகச் சித்தரிக்க அரசு விரும்புகிறது. நீங்கள் அவர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள். இந்த போராட்டமானது அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுக்கும் இடையில் நடக்கும் போராட்டமாகும்.” எனத் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]