தராபாத்

தெலுங்கானா மாநில நல்லெண்ண தூதரான சானியா மிர்ஸா பாகிஸ்தான் நாட்டு மருமகள் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக உறுப்பினர் டி ராஜா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநில நல்லெண்ண தூதராக ஐதராபாத்தை சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கணை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சோகைப் மாலிக்கை கடந்த 2010 ஆம் வருடம் திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் பெரும்பாலும் துபாயில் வசித்து வருகின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சானியாவுக்கு ஐதராபாத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

ராஜா சிங்

நேற்று தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் ஒரே பாஜக உறுப்பினரான டி ராஜா சிங், ”புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த இயக்கத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. நமது வீரமிக்க படை வீரர்களை பாகிஸ்தான் இயக்கம் கொன்றது மன்னிக்கத்தக்கது அல்ல. நாட்டில் உள்ள அனைவரும் இது குறித்து அண்டைநாடான பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புல்வாமா தாக்குதலை ஒட்டி தனது பிறந்த நாள் கொண்ட்டாட்டங்களை ரத்து செய்துள்ள்து மிகவும் பாராட்டத்தக்கது. அதே அளவு தீவிரத்தை அவர் தெலுங்கானா நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து சானியா மிர்ஸாவை நீக்குவதிலும் காட்ட வேண்டும். சானியா இந்தியாவில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் பாகிஸ்தானியை திருமணம் செய்துள்ளதால் அந்நாட்டு மருமகள் ஆவார்.

இந்திய அரசு பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் ரத்து செய்து அந்நாட்டை தனிமைப்படுத்தி வருகிறது. எனவே நாம் இன்னும் பாகிஸ்தான் மருமகளான சானியா மிர்ஸாவை நல்லெண்ண தூதராக வைத்திருக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். சானியா மிர்ஸாவைப் போலவே வி வி எஸ் லட்சுமண், சாயினா நேவால், பி வி சிந்து போன்ற பல புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தெலுங்கானாவில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.