சிவசேனாவிடம் பணிந்த அமீத்ஷா…. 50:50 உடன்பாட்டை ஏற்றார்

Must read

ந்தி ‘பெல்டில்’ பா.ஜ.க.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள ஒரே பெரிய மாநிலம்-மகாராஷ்ரா. சிவசேனாவையும் சேர்த்தால் மட்டுமே இது சாத்தியம்.

இதை உணர்ந்து கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே –பா.ஜ.க.வை கூட்டணி கட்சியாகவே பொருட்படுத்தாமல் சகட்டு மேனிக்கு –தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’ வில் நேற்று வரை திட்டி தீர்த்தார்.

பலவீனமான நிலையில் உள்ள பா.ஜ.க.வை மிரட்டி –தேர்தலில்-குறிப்பாக சட்டப்பேரவை தேர்தலில்  அமோக மகசூலை அறுவடை செய்துவிட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு சில மாதங்களில் அங்கு சட்ட மன்ற தேர்தலும் நடக்க உள்ளது. .

அங்கு மொத்தமுள்ள 288 எம்.எல்.ஏ.தொகுதிகளில் 50:50 ‘ஷேர்’ வேண்டும் என்பது தாக்கரேயின் நிபந்தனை. கடந்த வாரம் மும்பையில் தன்னை சந்தித்த அமீத்ஷாவிடம் இதனை தெளிவாக கூறிவிட்டார்-தாக்கரே.

”மோடியிடம் கேட்டு சொல்கிறேன்” என்று டெல்லி கிளம்பி போன அமீத்ஷா- நேற்று மும்பைக்கு திடீர் ‘விசிட்’ அடித்தார். சிவசேனா கேட்டபடி 50:50 ‘டீலு’க்கு ஒத்துகொண்டு –ஒப்பந்தத்திலும் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து கையெழுத்திட்டார்.

முதல்வர் பதவி யாருக்கு என்பது தேர்தலுக்கு பின் தீர்மானிக்கப்படும்.

எம்.பி. தொகுதிகளிலும் கணிசமாக பெற்றுக்கொண்டார்- தாக்கரே. அங்கு மொத்தம் 48 எம்.பி.தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க.வுக்கு 25, சிவசேனாவுக்கு 23 என  பிரித்து கொண்டார்கள்.

பா.ஜ.க.வும் ,சிவசேனாவும் தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி- மகாராஷ்டிராவில் பாதிக்கும் மேற்பட்ட  தொகுதிகளை அள்ளும் என்று கருத்து கணிப்புகள்  கூறின.

இதனால் உஷாரான மோடியும்,அமீத்ஷாவும்-சமரசங்கள்  செய்து கொண்டு சிவசேனாவை தங்கள் அணிக்குள் மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article