ராலேகான் சித்தி
கடந்த 2014 தேர்தலில் பாஜக தன்னை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே அவரது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் கடந்த 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இன்றும் ஏழாம் நாளாக அவர் போராட்டம் தொடர்கிறது. மத்தியில் லோக் ஆயுக்தா மைக்கவும் மாநிலங்களில் லோக்பால் அமைக்கவும் கோரி அவர் நடத்தி வரும் போராட்டத்துக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு அளித்துள்ளது.
நேற்று அவர் செய்தியாளர்களிடையே பேசும் போது, “கடந்த 2014 ஆம் வருடம் பாஜக என்னை உபயோகித்து வெற்றி பெற்றது. என்னுடைய லோக்பால் போராட்டம் தான் பாஜகவையும் ஆம் ஆத்மி கட்சியையும் ஆட்சியில் அமர்த்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். இப்போது எனக்கு அந்த கட்சிகளின் மீதிருந்த மதிப்பு முழுமையாக குறைந்து விட்டது.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களை பொய் மூலம் தவறான திசையில் அழைத்துச் செல்கிறது. மகராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 வருடங்களாக பாஜக அரசு முழுவதும் பொய்யாலேயே ஆட்சியையே நடத்துகிறது, இந்த பொய்கள் எத்தனை நாட்கள் தொடரும்? மக்களை இந்த அரசு கைவிட்டு விட்டது. மக்களின் 90 % கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு மற்றொரு பொய் சொல்லி உள்ளது.
விவசாயிகள் நலனுக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தற்போதைய டில்லி முதல்வர் கலந்துக் கொள்ளட்டும். அவர் தன்னை விவசாயிகளின் நண்பன் என சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவரை இம்முறை நான் என்னை ஏமாற்ற அனுமதிக்க மாட்டேன். இனி என்னை பாஜக, ஆம் ஆத்மி ஆகிய எந்த கட்சிகளும் ஏமாற்ற முடியாது”என கூறி உள்ளார்.