பார்மர்

ராஜஸ்தான் மாநில பார்மர் தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் சோனாராம் சவுத்ரி தன்னை கட்சி உபயோகப்படுத்தி விட்டு துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

ராஜஸ்தான் மாநில பர்மார் மக்களவை தொகுதியின் உறுப்பினர் சோனாராம் சவுத்ரி. ஆவார்.   இசே அந்த பகுதி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உடையவர் ஆவார். அவருடைய தொகுதி பாஜக தொண்டர்கள் பலரும் இவருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படாததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சோனாராம் சவுத்ரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், “நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஏராளமானவற்றை நிறைவேற்றி உள்ளேன். அவற்றில் பல முடிவடையும் தறுவாயில் உள்ளன. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்க தயாராக உள்ளேன்.

நான் எனது பகுதி மக்களுக்கு அநீதி இழைப்பதையும் அவர்கள் முன்னேற்றத்தை கவனிக்காததையும் என்றும் பொருத்துக் கொள்ள மாட்டேன். தற்போது பல முன்னேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பணியை முடித்ததும் அடுத்த பணிக்கு நான் தயாராக உள்ளேன். அதற்காகவே நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன்.

எனக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. என்னை கடந்த 2014 ஆம் வருடம் நடந்த தேர்தலில் உபயோகப்படுத்தி விட்டு தற்போது கட்சி எனக்கு துரோகம் இழைத்துள்ளது. எனது தொகுதி மக்கள் இதற்காக என்னை போராடச் சொன்னார்கள்.

ஆனால் நான் பிரதமர் மோடியுடன் உள்ளவன்.   எனக்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் மரியாதை அளிக்கவில்லை என்பதற்காக நான் மோடியுடன் விரோதம் கொள்ள முடியாது. நான் பணி புரிந்த மூன்று பிரதமர்களில் மோடி அசாதாரணமானவர். அவர் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்” என கூறி உள்ளார்.