ஸ்ரீநகர்

ட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்குப் பதிவை எதிர்த்து பாஜக ஆதரவு பெற்ற வழக்கறிஞர் அமைப்பு நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தியது.

காஷ்மீர் மாநிலம் கட்டுவா பகுதியில் பல நாடோடி வகுப்பு மக்கள் வசித்து வருகின்றனர்.    அந்த நாடோடி வகுப்பை சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார்.  பிறகு அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.    அவரை அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட எட்டு பேர் அந்த சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நாடோடி மக்களை பயமுறுத்தி அங்கிருந்து விரட்ட இது போல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.   இதை ஒட்டி அந்த 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.   அந்த 8 பேரில் இரு காவல்துறையினரும் உள்ளனர்.  கைதானவர்கள் குற்றமற்றவர்கள் என பாஜக ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மன்ச் என்னும் அமைப்பு போராட்டங்கள் நடத்தி வந்தது.    இந்த போராட்டங்களில் காஷ்மீர் அமைச்சரவையில் உள்ள சில பாஜக அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர்.

கைதான 8 பேர் மீது குற்றப்பத்திரிகை அளித்து வழக்கு பதிய நேற்று கட்டுவா நீதிமன்றத்துக்கு குற்றவியல் துறையினர் வந்தனர்.   அப்போது பாஜக ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மன்ச் அமைப்பை சார்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர்.    காவல்துறையினர் ஏராளமாக குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.    அந்த பாதுகாப்பையும் மீறி குற்றவியல் துறையினரை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அதன் பிறகு காவல்துறையினர் இடையில் புகுந்து குற்றைவியல் துறையினரை நீதிமன்றத்துக்குள் அனுப்பி வைத்தனர்.    குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.    போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர்.   இதனால் நீதிமன்றப் பகுதி பெரும் பதட்டத்துடன் காணப்பட்டது.