சென்னை:

ர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால், அதன் காரணமாக தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும் என்றும், கர்நாடகாவில் பாஜ பெற்ற வெற்றி, தென்னிந்தியாவில் தொடரும் என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

கர்நாடகாவில பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வெற்றி  பெற்று  ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக கர்நாடக பாஜவினர் மட்டுமல்லாது தமிழக பாஜகவினரும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை திநகரில் உள்ள பாரதியஜனதா அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கர்நாடகாவில் பாரதியஜனதா வெற்றி பெற்றுவரும் நிலையில் பாஜ தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கர்நாடகாவில் பாஜ பெற்றுள்ள வெற்றி,  தென்னிந்தியாவில் தொடரும் என்றும், கர்நாடக தேர்தலில் கடுமையாக உழைத்த பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கும், தேர்தலில் கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய எடியூரப்பாவுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்தார்.

மேலும், கர்நடகாவில் பாஜ வெற்றியானது, இந்தியாவுக்கு பல கருத்துக்களை எடுத்து சொல்கிறது என்றும், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பிரச்சாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை என்று கூறிய தமிழிசை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கர்நாடக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் கர்நாடக மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி வரவேண்டும் என்று ஏன் கூறினேன் என்றால், அதன் காரணமாக  கர்நாடகாவுக்கும்  நன்மை கிடைக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதே.

காவிரியில் உச்சநீதிமன்றம் திறந்து விடச் சொன்ன தண்ணீரை முதலமைச்சர் சித்தராமையா திறந்துவிடவில்லை. ஆனால் எடியூரப்பா ஆட்சியின்போது நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்துள்ளது என்றும்,  எடியூரப்பா இரண்டு மாநிலங்களையும் பிரித்துப் பார்க்க மாட்டார்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.