நெல்லை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, இன்னும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிடாத நிலையில், திருநெல்வேலி தொகுதியில், மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் இணைந்துள்ளது. அநத கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 10-ம் தேதி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி,
- திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3.குளச்சல் 4. விளவன்காடு 5.ராமநாதபுரம் 6. மொடக்குறிச்சி 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு 9. திருக்கோவிலூர். 10.திட்டக்குடி, 11. கோயம்புத்தூர் (தெற்கு) 12. விருதுநகர். 13. அரவக்குறிச்சி. 14. திருவையாறு, 15.உதகமண்டலம் 16. திருநெல்வேலி 17. தளி 18. காரைக்குடி 19.தாராபுரம்(தனி) 20. மதுரை (வடக்கு) ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த பட்டியலை இன்று பாஜக தலைமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். ஆனால், தற்போது நல்ல நேரம் என்பதால், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். வேறு ஏதும் காரணம் அல்ல என்றவர், தனக்கு அதிமுகவினர் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.