புதுடெல்லி: தேர்தலுக்காக கூகுள் விளம்பரங்களுக்கு செலவு செய்வதில், நாட்டிலேயே பாரதீய ஜனதாக் கட்சி முதலிடம் வகிக்கிறது.

கடந்த பிப்ரவரி 20ம் தேதியிலிருந்து, அக்கட்சி தரப்பில் மொத்தம் 554 விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான மொத்த செலவு ரூ.1.26 கோடி.

ஆனால், அவற்றில் 98 விளம்பரங்கள், தேர்தல் விளம்பர நூலகப் பிரிவில் காணக் கிடைக்கவில்லை. கூகுள் விளம்பர கொள்கையை மீறும் வகையில் அவை இருந்ததால், இந்த நிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் விளம்பரங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடையதாய் இருக்க வேண்டுமென்பது கூகுள் நிறுவனத்தின் விதிமுறை. ஏப்ரல் 4ம் தேதியன்று, தேர்தல் விளம்பரங்களுக்கான ‘இந்திய வெளிப்படைத்தன்மை அறிக்கை’ கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

கடந்த பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 4 வரையான தேதிகளில், ரூ.3.76 கோடி மதிப்பிலான மொத்தம் 831 விளம்பரங்கள் கூகுளில் வெளியிடப்பட்டுள்ளன.

– மதுரை மாயாண்டி