பாஜகவின் 'பசு' அரசியல் – பொறுக்க முடியவில்லை: மம்தா ஆவேசம்

Must read

கொல்கத்தா:
திரினாமுல் காங்கிரஸ் சார்பில்  கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க வை கடுமையாக தாக்கி பேசினார்.

கொல்கத்தா பேரணியில் மம்தா
கொல்கத்தா பேரணியில் மம்தா

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மீண்டும் ஆட்சியை பிடித்த மம்தா, தியாகிகள் தினத்தையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க மோடி அரசை ‘பசு அரசியலை நிறுத்துங்கள்’ என்று  ஆவேசமாக கூறினார்.
அவர் பேசியதாவது: சில நபர்கள் வீடு வீடாக சென்று பசுமாடு வைத்திருக்கிறீர்களா  என்று கேட்கிறார்கள். இம்மாதிரி கேள்வி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களுக்கு அவர்கள் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்பதை சிலர் மறந்து விட்டனர்.
நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை இல்லை, ஆனால் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை செய்கின்றனர். நான் புடவை அணிந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் சிலர் சல்வார் கமீஸ் அணிந்தால் பிரச்சினை… வங்காளிகள் வேட்டிகளையே விரும்புவர், ஆனால் சிலர் லுங்கியை விரும்புகின்றனர்.
இதனால் உங்களுக்கு என்ன? நீங்கள் யார் அதை தீர்மானிக்க? என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? இது எப்படி சாத்தியம், மக்களை பிரித்தாளும் இத்தகைய அரசியலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டதுக்கு எங்களது கண்டனங்களை எழுப்புகிறோம். மேற்கு வங்கத்தில் யாராவது வந்து பசுமாடு கணக்கெடுத்தாலோ, எங்களுக்குள் தீயை மூட்ட நினைத்தாலோ நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அரசியல் ரீதியாக இத்தகைய செயல்களை எதிர்கொள்வோம். வீடுகளுக்கு தீவைக்க நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.
தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிலர் நீண்டகாலமாக பசுமாட்டு தோல் வர்த்தகம் செய்து வருகிறார்கள. பசுமாட்டுத் தோலை காலணி தைப்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர், இவையெல்லாம் காலம் காலமாக  நடந்து வருகின்றன. ஆனால் தற்போது அவர்களை கட்டி வைத்து அடித்து உதைக்கிறார்கள். மாநில அரசு, மத்திய அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது. இனிமேலாவது இதுபோன்ற பசு மாட்டு அரசியலை நிறுத்துங்கள்  என்று ஆவேசமாகப் பேசினார் மம்தா பானர்ஜி.

More articles

Latest article