சென்னை:
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்ன் அமமுக கூடாரத்தில் இருந்து வெளியேறிய சுமார் 5 ஆயிரம் பேர் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ சகோதரர் பரணி கார்த்தி தலைமையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய ஸ்டாலின், 2016ல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியை பிடித்திருக்கும் என்றவர், ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தை ஏற்படுத்தி அதிமுக வெற்றிப்பெற்றதாக முறைகேடாக அறிவித்தனர் என்றார். கிட்டத்தட்ட 15 இடங்களில் நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியில் இருந்திருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மட்டுமல்ல ராதாபுரத்திலும் திமுகதான் வெற்றி என செய்தி வரும் என கூறினார். நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக தான் வெற்றி என செய்தி வந்துவிட்டது என்றவர், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல; பாஜக ஆட்சி என குற்றம் சாட்டினார்.