சென்னை: திமுக அரசின் ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று பாஜக போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,  பாஜக நிர்வாகிகளை காவல்துறை வேட்டையாடி வருகிறது. மேலும் முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் முடக்கி உள்ளது.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை  3 நாட்கள் தொடர் சோதனை நடத்தியது. இந்த சோதனையானது,   தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட டாஸ்மாக் மதுபான சப்ளை டிஸ்டில்லரி நிறுவனங்களான  எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில்  நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து,  இந்த சோதனையில் ரூ. 1000 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து,  திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிராக இன்று (எப்ரல் 17ந்தேதி) மாலை சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜக தரப்பில்  அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்ததார்.

இநத் நிலையில்,  இன்று பாஜகவினர் போராட்டத்தை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு காவல்துறையினர் மூலம்,  பாஜக நிர்வாகிகளை கைது செய்து வருகிறது. பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டது. மேலும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து போராட்டத்துக்கு புறப்பப்பட்ட  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபால, பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் மேலும் பல முக்கிய நிர்வாகிகளான எச்.ராஜா, தமிழிசை உள்பட பல நிர்வாகிகளை  வீட்டுக்காவல் வைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கும்; டாஸ்மாக் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி 2ஆவது குற்றவாளிதான்; 3 முதல் தகவல் அறிக்கைகளை வைத்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது; டாஸ்மாக்கில் 40% சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.  

இந்த  நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,  டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக  அண்ணாமலை,  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  , “திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை செளந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு. வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.