சென்னை,
முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பாரதியஜனதா தலைவர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் சென்னை வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவாலல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்பல்லோ டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் லண்டன் சிறப்பு டாக்டர் ரிச்சர்டு பீலே சென்னை வந்து முதல்வருக்கு சிசிச்சை அளித்துசென்றார்.
அதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து ஆலோசனை செய்து சென்றனர்.
பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்நானி மீண்டும் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்.
இன்று 20-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வரின் உடல் நலம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ்துணைத்தலைவர் ராகுல்காந்தி திடீரென அதிரடியாக சென்னை வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றது இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரதமர் மோடி, முதல்வரை சந்திக்க சென்னை வர இருப்பதாக தமிழக பா.ஜ.க. நிர்வாகி வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.
ஆனால், மோடி இதுவரை சென்னை வரவில்லை. அவருக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சரும், முதல்வர் ஜெயலலிதாவின் நண்பருமான அருண்ஜெட்லி நாளை சென்னை வருகிறார்கள்.
அவர்கள், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளனர்.
இதுகுறித்து, பாரதியஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பாரதியஜனதா கட்சி தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் நாளை பிற்பகல் சென்னை வந்து முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாகவும், இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த பயணத்திட்டமும் இல்லை என்றும் கூறினார்.