பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்கள் – வானதி சீனிவாசனுக்கு புதிய பதவி….

Must read

டெல்லி: பாஜக நாடாளுமன்றக் குழுவில் அதிரடி மாற்றங்களை பாஜக தலைமை மேற்கொண்டுள்ளது, பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் குழு உறுப்பினராக, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக  மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நியமனம் செய்யபட்டுள்ளார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை பாஜக தலைமை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, தற்போது, அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களாக,  கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி. சத்யநாராயணன் ஜட்டியா, பாஜக தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ் ஆகியோர் புதிதாக நாடாளுமன்ற குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த குழுவில் இடம்பெற்றுள்ள  பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடர்கின்றனர். உ.பி. முதல்வர் யோகிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெற வில்லை.  இந்த மாறுதலை சமூக ரீதியாகாவும் பிராந்திய ரீதியாகவும் அதிக பிரதிநிதித்துவம் உடையதாக மாற்றவே இந்தப் புதிய நியமனங்களை மேற்கொண்டுள்ளதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

அதுபோல,  மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசிய பொதுச் செயகர் பூபேந்திர யாதவ், ஓம் மாதுர் மற்றும் பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த குழுவில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹுசைன், ஜூவல் ஓரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

More articles

Latest article