விஜயவாடா

க்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க பாஜக முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் 17 ஆம் தேதி அன்று மக்களவையின் புதிய கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.   அன்றைய தினம் அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் நடைபெறும்.   அதன் பிறகு மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.   பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் அந்த கட்சி வேட்பாளர் சபாநாயகராக தேர்வு செய்யபடுவார்.

துணை சபாநாயகர் பதவியை ஆந்திராவின் தற்போதைய ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   இது குறித்து நேற்று முன் தினம் ஆந்திர முதல்வரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் சந்தித்துள்ளார்.

அப்போது அவர் பாஜகவின் விருப்பம் குறித்து அறிவித்து ஜெகன் மோகன் கட்சியின் 22 மக்களவை உறுப்பினர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.  இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதலில் கூறப்பட்டபோதிலும் பாஜகவின் முடிவு குறித்து பேசவே நடத்தப்பட்டதை நரசிம்மராவ் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் பாஜகவின் இந்த முடிவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.    தற்போதைய தேர்தலில் அவருக்கு கிறித்துவ மற்றும் இஸ்லாமிய வாக்குகள் பெருமளவில் கிடைத்துள்ளதால்  இது குறித்து அவர் யோசிக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.