மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம்சாமியாரினியான பிரக்யா சிங் தாக்கூர். சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி, அவ்வப்போது மீடியாக்களில் வலம் வரும் பிரக்யாசிங், கடந்த சில மாதங்களாக காணப்படாத நிலையில், அவரை காணவில்லை என்று மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதற்கிடையில், பைராகர் சிசிலி பகுதியில் நடமாடும் கொரோனா மருத்துவமனை சேவையை வீடியோ கால் மூலம் துவக்கி வைத்த பிரக்யாசிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதா மத்திய பிரதே சமாநில பாஜக நிர்வாகி உமாகாந்த் தீட்சித் கூறி உள்ளார்.
எம்பி பிரக்யா சிங் ஊரில் இல்லாதபோதும், கட்சியினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருவதாகவும் உமாகாந்த் கூறினார்.
பிரக்யா சிங் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கண் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில செய்தித் தொடர்பாளர் ராகுலி கோத்தாரி கூறியுள்ளார்.