சிந்தியாவை  எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி.

மத்தியபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் செல்வாக்குடன் திகழ்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காங்கிரசில் இருந்து கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் எம்.எல்.ஏ.பதவியில் இருந்து விலகினர். அனைவரும் பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

இதனால் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க.ஆட்சி மலர்ந்தது.

சொற்ப மந்திரிகளுடன் ஆட்சி நடத்தி வந்த சவுகான், கடந்த 2 ஆம் தேதி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.

மொத்தம் 22 பேர் மந்திரிகளாகப் பதவி ஏற்றனர்.

ஆனால் இதுவரை அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தனது ஆட்களுக்கு வளம் கொழிக்கும் இலாகாவைக் கேட்டு சிந்தியா , அடம் பிடிப்பதால் இலாகா ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதே கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார், பா.ஜ.க. எம்.பி.யான கணேஷ் சிங்.  இவர் ,சட்னா தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

’’மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவது, தேவையற்றது’’ என்று அவர் கூறியுள்ளார்.

 ‘’ இந்த காலதாமதத்துக்கு சிந்தியா காரணம் என்றால்,அவர் தனது நிலையைப் பரிசீலிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ள கணேஷ் சிங்’’ இலாகா ஒதுக்குவது முதல்-அமைச்சர் சவுகானின் உரிமை.அதில் யாரும் தலையிட வேண்டாம்’’ என்று சிந்தியாவை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

கட்சி மாறியதற்கு வெகுமதியாக சிந்தியாவுக்கு ராஜ்யசபா பதவி அளிக்கப்பட்டுள்ளது.

(பதவி விலகிய )அவரது எம்.எல்.ஏ.க்கள் 12 பேருக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.