மனவியுடன் திக் விஜய் சிங்

போபால்

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் மனைவியை ‘டில்லியில் இருந்து வந்த ஒரு ஐட்டம்’ என பாஜக  பாராளுமன்ற உறுப்பினர் கேவலமாக கூறியது பரபரப்புக்கு உள்ளாகியது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பதவி வகிப்பவர் திக் விஜய் சிங்.   தற்போது 77 வயதாகும் திக் விஜய் சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு டில்லியைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளரான அமிர்தா ராய் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நர்மதை நதியை சுத்தம் செய்வதில் முறைகேடு நிகழ்ந்ததாக மத்தியப் பிரதேச அரசு மீது புகார்கள் எழுந்தன.   அதை ஆய்வு செய்ய சன்யாசிகள் அடங்கிய ஒரு குழு நர்மதை யாத்திரை செய்யப் போவதாக அறிவித்தது.    அதை ஒட்டி அந்த சன்யாசிகளுக்கு மத்தியப் பிரதேச அரசு அமைச்சர்கள் அந்தஸ்து கொடுத்து அரசு வாகனங்களும் அளித்தது.   இந்நிகழ்வுக்கு திக் விஜய் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதை ஒட்டி அவர் 3200 கிமீ  நர்மதை யாத்திரையை தனது மனவி அமிர்தா ராயுடன் தொடங்கி இந்த மாதம் 9 ஆம் தேதி நிறைவு செய்தார்.   தனது யாத்திரையின் போது நர்மதை நதியை சுத்தம் செய்ததில் அரசு செய்த முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை அவர் கண்டறிந்துள்ளதாகவும் விரைவில் அவைகளை அவர் வெளியிடுவார் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினரான மனோகர் உந்துவால் நேற்று இதுகுறித்து கேவலமான கருத்து ஒன்றை கூறியது பெரும் பரபரப்புக்குள்ளாகியது.

போபாலில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய மனோகர் உந்துவால், “திக் விஜய் சிங் மத்தியப் பிரதேசத்துக்காக டில்லியில் இருந்து ஒரு ‘ஐட்டம்’ மட்டுமே கொண்டு வந்துள்ளார்.  அதை தவிர வேறெதுவும் கொண்டு வரவில்லை.  அவர் அந்த ஐட்டத்துடன் நர்மதை யாத்திரை நடத்தி இருக்கிறார்.   அத்துடன் சன்யாசிகளுக்கு அரசு வாகனங்கள் அளித்ததை குறித்து கேள்வி எழுப்புகிறார்   அவரிடமே குறைகள் உள்ளதை அவர் கவனிக்க வேண்டும்”  என கூறி உள்ளார்.

பொதுவாக ஒரு பெண் தவறான நடத்தையுடன் இருந்தால் அவரை பேச்சு வழக்கில் ஐட்டம் என கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.