லக்னோ:
பாஜக.வினர் ஒழுக்கமுள்ளவர்கள் என்று அக்கட்சி தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை அதிபர்களிடம் விசாரித்து பார்த்தால் பாஜக எம்எல்ஏ.க்களின் செயல்பாடு தெரியவரும்.
கடந்த 20ம் தேதி உத்தரபிரதேச சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம் சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில், பாஜக எம்எல்ஏ.க்கள் சிலர் தங்களை மிரட்டுவதாகவும், சங்கத்தை சேர்ந்தவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், மனம் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தலை செய்வதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலை பணியாளர்கள், அதிகாரிகளை ராஜினாமா செய்யக் கோரியும், விடுப்பில் செல்ல வலியுறுத்தியும் மிரட்டுகின்றனர். மேற்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பாக பிஜ்னோர் சியோஹரா, கோண்டா பாப்னான், பிஜ்னோர் தாம்பூர், பிஜ்னோர் புந்த்கி, சாஜகான்பூர் நிகோய் ஆகிய இடங்களில் இச்சம்பவம் அதிகளவில் நடக்கிறது.
ஏற்கனவே சர்க்கரை விலை வீழ்ச்சியால் ஆலைகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஒரு புறம் தொழிற்சாலைகளுக்கு பேரழிவு காலமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மன உறுதி குறைந்து காணப்படுகின்றனர். மற்றொரு புறம் மக்கள் பிரதிநிதிகள் எங்களது பணியாளர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். மிரட்டுகின்றனர். எம்எல்ஏ.க்களின் சட்டவிரோத தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்குமாறு தொழிற்சாலைகளை மிரட்டுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.