உத்தரப்பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில், 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாகச் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக அரசு தரப்பில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகளின் ஒரு பகுதி நிறைவு பெற்று சாலையின் திறப்புவிழா நடைபெற்றது.
சதர் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுசி சவுத்ரி இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தேங்காயை உடைத்து சாலையைத் திறந்து வைக்க முயன்றார். தேங்காய் சாலையில் பட்டபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டது.
சாலையிலிருந்து கற்கள் சிதறியதால் சட்டமன்ற உறுப்பினர் சுசி சவுத்ரி அதிர்ச்சியடைந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவதற்காக அவ்விடத்திலேயே காத்திருந்த அவர், அதிகாரிகள் வந்து சிதறிய பாகங்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற பின்னர் புறப்பட்டார்.
சாலை மோசமாக அமைக்கப்பட்ட விவகாரம் குறித்துத் தான் மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாகவும், சாலை போதுமான தரத்துடன் அமையவில்லை என்று புகார் கூறியிருப்பதாகவும் அவர் கூறினார்.
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.