நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தில் 13 பேர் சுட்டுக் கொலை

Must read

கொஹிமா

நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது.  இங்கு நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.   அசாம் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு இந்த மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன.  இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர்.

அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.   தற்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதும் பொதுமக்கள் என்பதும் உறுதி ஆகி உள்ளது.    அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களான இவர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல காத்திருந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நிகழ்வால் பொதுமக்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இதில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கின.  படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.   இந்த படுகொலைச் சம்பவத்துக்கு நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

நைபுயு ரியோ தனது டிவிட்டரில்,

“மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பொதுமக்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். பொதுமக்கள் படுகொலைக்கு சட்டப்படியான நீதி பெற்றுத்தரப்படும். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்”

என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article