நாக்பூர்: பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை தரக்குறைவாக பேசிய காரணத்திற்காக மராட்டிய மாநில பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர் சரண் வாக்மரே.
தும்சார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் இருக்கிறார். கடந்த செப்டம்பர் 16ம் தேதி தொழிலாளர்களுக்கு கட்டுமானப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது, அங்கேப் பணியில் இருந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் எழவே, சட்டமன்ற உறுப்பினர் அந்த அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தும்சார் காவல் நிலையத்தில் சரண் மீது புகார் பதிவுசெய்தார் அந்த பெண் அதிகாரி. இந்த வழக்கு 353(அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல்), 354(ஒரு பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்) மற்றும் 506(அச்சுறுத்தல்) ஆகியப் பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.