இந்திரா காந்தியை பாதுகாவலர் கொன்றது போல் என்னையும் கொல்ல பாஜக சதி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Must read

புதுடெல்லி:

இந்திரா காந்தியை அவரது பாதுகாவலரே கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.


பஞ்சாப் செய்தி தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திரா காந்தி அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார். அதேபோல் என் பாதுகாவலராலேயே என்னை கொலை செய்ய என் பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது.

எனது பாதுகாவலர்கள் பாஜ மத்திய அரசுக்கு தகவல் சொல்கிறார்கள்.  அவர்கள் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.

இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீஸார் மறுத்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளவர்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள். பாதுகாப்புப் படையினர் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பாதுகாப்பு அளித்து உன்னத பணியாற்றுகின்றனர் என்றனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் கூறும்போது, முதல்வரான பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் 6 முறை போலீஸார் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

இந்த விசயத்தில் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை நம்பாமல் இருக்க முடியாது என்று காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் தெரிவித்துள்ளன.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு கூறிய உடனேயே மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜ்ஜு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் எல்லை தாண்டி பேசுகிறார். ஒரு முதல்வர் எப்படி பொறுப்பற்று பேசுகிறார் என்று தெரியவில்லை.

நாங்கள் அரசியல் போட்டியாளர்கள் தான். எதிரிகள் இல்லை. நாட்டுக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்று ட்விட்டர் பதிவில் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article