டெல்லி: நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரான சுப்பிரமணியசாமியே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த பட்ஜெட் மளிகை கடைக்காரரின் பில் போல உள்ளது வேறு ஒன்றும் இல்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சில வரி குறைப்புகளும், சிகரெட், தங்கம் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு வரி ஏற்றமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி குறிப்பிட்டு எந்தவொரு சிறப்பான திட்டம் தொடர்பாகவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, இதுதொடர்பாக பதிவிட்டுள்ள டிவிட்டில், தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது மளிகை கடைக்காரர் ஒருவரின் பில்லாக உள்ளது. சரியான பட்ஜெட் என்பது நாட்டின் குறிக்கோள்கள் என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? வருவாய் விகிதம் என்ன? என்ன என்பதை கூற வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வளங்களை கையாளும் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்து காட்ட வேண்டும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.