க்னோ

யோகி ஆதித்யநாத்தின் தவறான கொரோனா மேலாண்மையால் ஒவ்வொரு ஊரிலும் 10 பேர் உயிர் இழப்பதாக பாஜக தலைவர் ராம் இக்பால் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா மேலாண்மை மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் எழுகின்றன.  இதில் பாஜகவினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா மேலாண்மையை மோசமாகக் கையாள்வதாகக் குறை கூறி வருகின்றனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் தேதி மத்திய தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் கங்வார் தனது பரேலி தொகுதியில் அதிகாரிகள் கொரோனா நோயாளிகளின் எந்த ஒரு அழைப்பையும் எடுப்பதில்லை எனவும் மாநில சுகாதார மையங்கள் கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனையில் இருந்து வெளி மருத்துவமனைக்குச் செல்ல சிபாரிசு செய்வதாகவும் புகார் அளித்தார்.

அதற்கு அடுத்த நாளே ஹஸ்ரானா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மூன்று மணி நேரம் காத்திருந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  தனது மனைவியை ஆக்ரா மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை எனக் கூறி சேர்க்க மறுத்ததைத் தெரிவித்தார்.  இந்த இரு நிகழ்வுகளும் நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் பாஜக செயல் குழு உறுப்பினர் ராம் இக்பால் சிங் ”உபி மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கொரோனா மேலாண்மையில் மிக மோசமாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் குறைந்தது 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.   கொரோனா முதல் அலையில் இருந்து அரசு எந்த ஒரு பாடமும் கற்கவில்லை என்பது இதனால் தெரிகிறது.” எனக் கூறி உள்ளார்.

பாஜக ஆளும் மாநிலத்தில் பாஜக தலைவரே முதல்வரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.