துபாய்

ந்தியாவில் பாஜக ஐடி செல் சரியாகச் செயல்படாதது  குறித்த செய்திகளை வெளியிட்ட கல்ஃப் நீயுஸ் ஊடக ஆசிரியர் மஸார் ஃபரூக்கி என்பவருக்கு பாஜக ஐடி குழு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

துபாயில் இருந்து வெளி வரும் செய்தி ஊடகமான கல்ஃப் நீயுஸ் ஊடகத்தில் மஸார் ஃபரூக்கி என்பவர் பணி புரிந்து வருகிறார்.  இவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர் இந்தியா மற்றும் துபாயில் வசிக்கும் இந்தியர்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.    இவர் சமீபத்தில் பதிந்த பாஜக ஐடி குழு பற்றிய செய்தி அரேபியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் பலரால் பகிரபட்டது.

அந்த செய்தியில் இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வரும் வேளையில் பாஜக ஐடி குழு இஸ்லாமியர்களை பற்றிய தவறான தக்வ்லகளை மட்டும் வெளியிடுவதாகவும் அதைப் பகிரும் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் மீது காவல் துறையினர் வழக்கு பதியப்படுவதாகவும் ஒரு சிலர் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் செய்தி வெளியிட்டார்.

இதையொட்டி அவருக்கு வலைத் தளம் மூலம் பாஜக ஐடி குழுவைச் சேர்ந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளதாக நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   ஃபரூக்கி க்கு இ மெயில், வாட்ஸ்அப், முகநூல், மெசெஞ்சர், டிவிட்டர் உள்ளிட்டவை மூலம் இந்த மிரட்டல்கள் அனுப்பப் பட்டுள்ளதாக வெளி வந்துள்ள அந்த செய்தியில் இந்த கணக்குகள் வைத்திருப்போரில் சிலரைப் பிரதமர் மோடி பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த மிரட்டல்களில்,

“நீங்கள் இங்குள்ள பாதுகாப்பு அமைப்பு மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறீர்கள்.  இந்தியாவில் உங்கள் எதிர்காலம் நிலையற்று உள்ளது.  இங்கு நீங்கள் வந்தால் சிறை செல்ல நேரிடும்’

”இவருடைய குடும்பத்தினர் எங்கு வசிக்கின்றனர்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  உங்கள் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்”

”நீங்கள் எங்கள் பட்டியலில் இருக்கிறீர்கள். உங்கள் மகள்களும் உங்களுடன் உள்ளனர்’

என உள்ளன.

இது குறித்து ஃபரூக்கி, “இது ஒரு சர்வ்தேச பரவுதல் போன்றதாகும்.  இது போல எனக்கு சுமார் 5000 மிரட்டல்கள் இ மெயில், முகநூல் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ,வாட்ஸ்அப் உள்ளிடவை மூலம் நூற்றுக்கணக்கான நபர்களிடம் இருந்து வருகின்றன.  ஆனால் அதன் பிறகு அந்த நபர்கள் தங்கள் கணக்குகளை அச்சம் காரணமாக அழித்து விடுகின்றனர்.   இவர்களில் பெரும்பாலானோர் பாஜக ஐடி குழுவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.” என தெரிவித்துள்ளார்.