சென்னை
ஊழல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு பாஜக ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். வேலுமணி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவர் கோவையில் மட்டும் சுமார் ரூ.1500 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்பாலம், கோவை மேம்பாட்டுப் பணிகள் என ரூ.1500 கோடி ஊழல் செய்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் தமிழகம் முழுவதும் ரூ.5000 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சென்னை சட்டசபை உறுப்பினர் விடுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் விசாரணை நடத்தினர். வேலுமணியின் இல்லம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து அதிமுகவினர் சிலர் வேலுமணி வீட்டின் முன்பு காலை போராட்டம் நடத்தினர்.,
இந்நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் கே டி ராகவன், “திமுக அரசு அரசியல் பழி வாங்கும் போக்கை கை விட வேண்டும். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாகத் தெரிகிறது” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு பாஜக ஆதரவாக உள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.