சென்னை: முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், தண்ணீர் தேங்கி உள்ளதாக பாஜகவினர் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. பாஜகவுக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம், உடனுக்குடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில் வடசென்னையில் தாழ்வான பகுதிகளில் தங்கிய தண்ணீரை வெளி யேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும், வடசென்னையின் வியாசர்பாடி, முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர், திரு.வி.நகர், பெரியார் நகர் உள்பட சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதை நேற்று அநேரில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு உடனே அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து கொளத்தூர் பகுதியில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இநத் நிலையில், பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதி அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளதாக பழைய புகைப்படத்தை வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளார்.
இதற்கு திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் தொகுதியான கொளத்தூரில் உள்ள தொகுதி அலுவலகத்தின் படத்தை பதிவிட்டு, அலுவலகம் இப்போது இவ்வாறு இருக்கும்போது, பழைய புகைப்படத்தை போட்டு, மக்களை பாஜக குழப்பி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பற்றி போலி செய்தி பரப்பும் பாஜகமீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.