புதுடெல்லி: கடந்த 1999ம் ஆண்டிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணிகளை கவனித்தீர்கள் என்றால், வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சிக்கப்படும் காங்கிரஸ் கட்சிக்கு, தான் சற்றும் சளைத்ததல்ல என்று நிரூபித்துள்ளது பாரதீய ஜனதா.
கடந்த 1999ம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களில், 36 பேர் அரசியல் குடும்பப் பின்னணிகளிலிருந்து வந்தவர்களாய் இருந்தனர். அதாவது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ரத்தவழி வாரிசாகவோ அல்லது அந்தக் குடும்பத்தில் திருமண உறவுகொண்டவராகவோ இருந்து, நாடாளுமன்ற உறுப்பினரானவர்கள்.
காங்கிரஸ் கட்சியில் இந்த எண்ணிக்கை 36 என்றால், பாரதீய ஜனதாவில் மிகவும் குறைவாக இருந்திருக்கும் என நினைத்துவிடாதீர்கள். அங்கு, இத்தகைய வாரிசு உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 என்பதாக இருந்தது.
அதேபோன்று 2009ம் ஆண்டை எடுத்துக்கொண்டால், வாரிசுகளாய் தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11% என்றால், பாரதீய ஜனதாவின் வாரிசு உறுப்பினர்களின் எண்ணிக்கையோ 12%.
எனவே, ‘வாரிசு அரசியல்… வாரிசு அரசியல்’ என காங்கிரசை விமர்சிக்கும் பாரதீய ஜனதா, தானும் அந்த விஷயத்தில் சளைத்ததல்ல என்பதை நிரூபித்து வருகிறது. நீண்டகாலமாக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வாரிசுகளை விட, புதிதாக ஆட்சியைப் பிடித்த புதியக் கட்சியான பாரதீய ஜனதாவில் இருக்கும் வாரிசுகளின் எண்ணிக்கை நிச்சயம் மலைக்க வைக்கும் ஒன்றே..!
– மதுரை மாயாண்டி