திண்டுக்கல்: பாஜக திமுகவை ஏதாவது செய்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தைப் பறிக்கின்றனர். என்ஐஏ சோதனை அனுப்புகின்றனர். காரணம், என்னைக் கண்டு பாஜக பயப்படுகிறது என்று திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மட்டுமின்றி நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் கயிலை ராஜனை ஆதரித்து சீமான் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, பாஜகவை தமிழகத்தில் கொண்டுவந்தது திமுகவும் மறைந்த முதல்வர் கருணாநிதியும்தான். பாஜகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். வாஜ்பாயை இந்திய நாட்டின் பிரதமராக்கி, இந்த நாடு முழுவதும் வலிமையான அதிகாரத்தை வேர் பரப்ப வைத்து அவர்களை வலிமையான அரசாக மாற்றியது திமுகதான். இதுதான் உண்மை. எனவே, மக்கள் மறுபடியும் அந்த வரலாற்று பெருந்தவற்றை செய்யக்கூடாது.
கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று 6 மாதங்களுக்கு முன்பே நான் கடிதம் எழுதினேன்; கச்சத்தீவு நம்மிடம் இல்லை என்பது பாஜகவுக்கு தேர்தல் வரும்போதுதான் தெரியவருகிறதா?. ஆர்எஸ்எஸ் பாஜகவை நாம் எதிர்ப்பது பரம்பரையாக நீடிக்கிறது. வெள்ளையர்களைவிட பாஜகவினர் பேராபத்தானவர்கள்.
பாஜக திமுகவை ஏதாவது செய்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தைப் பறிக்கின்றனர். என்ஐஏ சோதனை அனுப்புகின்றனர். காரணம், என்னைக் கண்டு பாஜக பயப்படுகிறது.ஹ
நாம் தமிழர் வீரன், திமுக கோழை. அதனால் அவர்களைக் கண்டு பயப்படுவது இல்லை. பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் சொல்கின்றனர், திமுக ஜக்கம்மா சொல்கிறாள் என்று குடுகுடுப்பை அடிக்கின்றனர்.
திமுக கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை மதிப்பது இல்லை. 22 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. அதில் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு கொடுத்த இடங்கள் எத்தனை? ஒன்றும் கொடுப்பது இல்லை என்று விமர்சித்தவர், நாம் தமிழர் கட்சியில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு தலா இரண்டு இடங்கள் கொடுத்திருக்கிறோம்.
அரசியலில் சிறுபிள்ளைகளான நாங்களே சமூகநீதி அடிப்படையில் இப்படி பிரித்துக் கொடுத்திருக்கும்போது, இவ்வளவு பெரிய கட்சி திமுக ஏன் அதை செய்யவில்லை?
நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காக தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
இவ்வாறு கூறினார்.