தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக 20 இடங்களில் மட்டும்தான் போட்டியிடுகிறது மற்றும் விரும்பி கேட்ட பல தொகுதிகளும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், கோவை தெற்கு தொகுதியை தவிர, வேறு எங்கும் அக்கட்சிக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.
எது எப்படியோ, கடந்த 2 மாதங்களாகவே, தமிழ்நாடு தேர்தலில், பெரியளவிலான பேசுபொருளாக அக்கட்சிதான் இருந்தது. அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ என்பது தனி! ஆனால், அரசியல் விமர்சகர்களாகட்டும், முகநூலில் தீவிரமாக இயங்குபவர்களாகட்டும், சாதாரண முறையில் அரசியல் பேசுபவர்களாகட்டும், அவர்களது பேச்சு மற்றும் கருத்துகள், அதிகளவில், பாஜகவை சுற்றிசுற்றியே இருந்தன.
தமிழ்நாட்டில், அக்கட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், பெரியளவில் எதிர்ப்புணர்வு இருப்பதாகவே கருதப்படுகிறது. சுவர் விளம்பரங்களில்கூட, பல இடங்களில், மோடியின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்த முடியாத நிலை!
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தபோதும், இங்கு பாஜக போட்டியிடுகிறதா? என்பதே பலருக்கும் தெரியாத நிலை இருந்தது. ஆனால், இத்தேர்தலில், தமிழ்நாடு அளவில், அது எதிர்மறையாக இருந்தாலும், அக்கட்சி பெரியளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இதன்மூலமாக கிடைத்த விளம்பரத்தில், அக்கட்சி பலரையும் சென்றடைந்துள்ளது. இந்த எதிர்மறை விளம்பரத்தை, அடுத்த தேர்தலுக்கான நேர்மறை தாக்கமாக மாற்ற முடியும் என்றும்கூட பாஜக நினைக்கலாம்!
எது எப்படியோ, 2001 சட்டமன்ற தேர்தலுக்கு அடுத்து, அடுத்தடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல்களில், எந்தவித சிறிய முக்கியத்துவம்கூட பெற முடியாத நிலையிலிருந்த அக்கட்சிக்கு, இத்தேர்தலில் கிடைத்த விளம்பரம், ஏதோ ஒருவகையில் பார்த்தால் சாதனைதான்! அந்த வகையில், அவர்கள் சாதித்துவிட்டார்கள்..!