மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் தற்போது இரண்டு துணை முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசில் தற்போது மூன்று எஞ்சின் பொறுத்தப்பட்டு அனைத்து திட்டங்களும் அதிவேகத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 8 எம்.எல்.ஏ.க்களும் அவருடன் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதில் அமைச்சராக பொறுப்பேற்ற காகல் தொகுதி எம்.எல்.ஏ. அசன் முஷ்ரிப் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 100 கோடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
சர்க்கரை ஆலை ஊழல் தொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையிட்ட அமலாக்கத்துறை அவர் மீது ஊழல் புகார் சுமத்தியிருந்தது. இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அமலாக்கத்துறை பாஜக-வின் ஏவல் துறையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருவதை உறுதிப்படுத்தியுள்ளது.