டில்லி

பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சிறுசேமிப்புக்கான வட்டி குறைப்பு உத்தரவை ஒரே நாளில் பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது

மக்கள் மிகவும் நம்பகமான முதலீடாகக் கருதுவது அரசின் சிறு சேமிப்பு திட்டங்களான பிராவிடண்ட் ஃபண்ட், தபால் நிலைய சேமிப்பு போன்றவை ஆகும்.   தங்களுடைய பணம் இத்தகைய சேமிப்புக்களில் பாதுகாப்பாக இருக்கும் எனவும் நியாயமான வட்டி கிடைக்கும் என மக்கள் மிகவும் நம்பி வந்தனர்.

பிராவிடண்ட் ஃபண்டுக்கான வட்டி கடந்த 1974 முதல் குறைக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் நேற்று சேமிப்புக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7% வட்டி 6.4 ஆக ஏப்ரல் 1 முதல் குறைக்கப்படும் என அரசு அறிவித்தது.   இது 1974க்குப் பிறகு குறைக்கப்பட்டு வந்த வட்டியில் மிகவும் குறைந்த விகிதம் ஆகும்.  இது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசின் சிறுசேமிப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் 2020-21 ஆம்  ஆண்டு இறுதி காலாண்டில் பின்பற்றப்பட்ட மாதிரியே இனியும் தொடரும்.   தவறுதலாக வெளியிடப்பட்ட உத்தரவுகள் திரும்ப பெறப்படுகின்றன” என அறிவித்துள்ளார்.

ஒரே இரவில் அரசின் உத்தரவு இவ்வாறு திரும்பப் பெறப்பட்டது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   அரசு எவ்வித ஒரு யோசனையும் இன்றி இந்த “தவறுதலான” உத்தரவைப் பிறப்பித்து உடனடியாக அதைத் திரும்பப் பெற்றது துக்ளக் அரசை நினைவு படுத்துவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.