டில்லி
நேரு அருங்காட்சியகம் உள்ளிட்ட 12000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியைப் பெற இந்தியாவில் செயல்படும் என்ஜிஓ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வப்போது இதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இவற்றின் வரவு, செலவுகளை மத்திய அரசு கண்காணிக்கும். பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு, என்ஜிஓ.க்கள் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதைக் கடுமையாகக் கண்காணித்து வருகிறது. தற்போது வெளிநாட்டு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இன்று மத்திய உள்துறை அமைச்சகம் டிசம்பர் 31ம் தேதியுடன் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்காததால், 12,000 என்ஜிஓக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமத்தைப் பெற்ற என்ஜிஓக்கள் எண்ணிக்கை 22,762 ஆக இருந்தது. இந்த பட்டியலில் ஆக்ஸ்பேம் இந்தியா, ஜமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய இஸ்லாமியக் கலாச்சார மையம் உள்ளிட்டவை உள்ளன.
கடந்த செப்டம்பர் 29,.30 தேதிகளில் இந்நிறுவனங்களின் உரிமம் காலாவதியானது. இதை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் 3 மாதம் அவகாசம் வழங்கியது. நிறுவனங்கள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020ம் ஆண்டு செப்டம்பரில் புதுப்பிக்கத் தவறிய, 6 ஆயிரம் நிறுவனங்களுக்கு மட்டும், உரிமத்தைப் புதுப்பிக்க மார்ச் வரை அவகாசம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அவகாசம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.